You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை 2025 | உலக சுற்றுச்சூழல் தினம் கருப்பொருள்

உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை 2025 | உலக சுற்றுச்சூழல் தினம் கருப்பொருள்

உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை 2025


பசுமைமிக்க எதிர்காலம் நோக்கிய பயணம் உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் - (Ending plastic pollution)

உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day ) என்பது ஆண்டுதோறும் ஜூன் 5ஆம் தேதி
கொண்டாடப்படும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நாள் ஆகும். இது சுற்றுச்சூழலை
பாதுகாப்பதும் மேம்படுத்துவதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்குடன் ஒவ்வொரு
ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. 1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் இந்த தினம்
துவங்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினம், உலகளாவிய சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு
நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் ஒரு மேடையாக செயல்படுகிறது .

உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவம்

விழிப்புணர்வை ஏற்படுத்துவது: உலக சுற்றுச்சூழல் தினம், காலநிலை மாற்றம், மாசுபாடு, உயிரினப் பல்வகைமை போன்ற சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த சிக்கல்களை முன்வைத்து, தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் அரசாங்கங்களை நடவடிக்கை எடுக்கவும், நிலைத்த வாழ்க்கை முறைகளைத் தேர்வுசெய்யவும் உலக சுற்றுச்சூழல் தினம் தூண்டுகிறது.

Read Also: உலக ஈரநில தினம் என்றால் என்ன?

பங்கேற்பை ஊக்குவிப்பது

வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் உள்ள மக்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க உலக சுற்றுச்சூழல் தினம் ஊக்குவிக்கிறது. மரம் நடுதல் ,தூய்மைப் பணிகள், கல்வி வழி சுற்றுசூழல் சார் கருத்தரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மூலம், பசுமைமிக்க எதிர்காலத்திற்காக ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவில் பங்களிக்க இயலுமாறு வாய்ப்பளிக்கிறது.

நிலைத்த வாழ்வை ஊக்குவிப்பது

புதிய முயற்சிகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை எடுத்துரைத்து, உலக சுற்றுச்சூழல் தினம் நிலைத்த வாழ்க்கை முறையை ஊக்குவிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களை மற்றும் முடிவுகளை மக்களிடையே ஊக்குவிக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள்

குறைத்தல் (REDUCE) , மீண்டும் பயன்படுத்துதல் (REUSE) , மறுசுழற்சி செய்தல் (RECYCLE)

நிலைத்த வாழ்வின் அடித்தளமாக “மூன்று R-கள்”—குறைத்தல், மீண்டும் பயன்படுத்தல், மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவை கருதப்படுகின்றன. நம்முடைய நுகர்வை குறைப்பதும், பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதும், கழிவுகளை மறுசுழற்சி செய்வதுமூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைத்து, மதிப்புமிக்க வளங்களை பாதுகாக்கலாம்.

நிலைத்த போக்குவரத்து

நடப்பது, மிதிவண்டி ஓட்டுவது, அல்லது பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது போன்ற நிலைத்த போக்குவரத்து முறைகளைத் தேர்வுசெய்வதன் மூலம் கார்பன் வாயு வெளியீடுகள் மற்றும் காற்று மாசுபாட்டை கணிசமாக குறைக்கலாம்.

ஆற்றல் திறன்

வீடுகளிலும் பணியிடங்களிலும் ஆற்றல் திறனை மேம்படுத்துவதன் மூலம், நமது கார்பன் பயன்பாட்டை குறைக்க முடியும், அதேசமயம் மின்சாரச் செலவுகளையும் சிக்கனமாக்கலாம். LED விளக்குகள், மற்றும் ஆற்றல் திறன் மிக்க சூழல் பாதுகாப்பு சார்ந்த உபகரணங்களைப் பயன்படுத்துவது போன்ற எளிய நடவடிக்கைகள் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

நீர் பாதுகாப்பு

நீர் என்பது ஒரு மதிப்புமிக்க வளமாகும்; அதை பாதுகாப்பது நிலைத்த எதிர்காலத்திற்கு அவசியம். குடிநீரோட்டங்களில் ஒழுங்கு செய்வது, குறைந்த நீர் ஓட்டத்தைக் கொண்ட கருவிகளை நிறுவுவது, மற்றும் தண்ணீர் சேமிப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது ஆகியவை நம்முடைய தண்ணீர் நுகர்வை குறைத்து, நீர் எனும் அதிமுக்கிய வளத்தை பாதுகாக்க உதவுகின்றன.

நிலைத்த வாழ்வுமுறையை ஏற்க உதவும் ஆலோசனைகள்

தேவையானவற்றை மட்டும் நுகர்வது

நமது நுகர்வுப் பழக்கங்களை விழிப்புணர்வுடன் அணுகுவது, நிலைத்த வாழ்க்கை
நோக்காக எடுத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான முதல் படியாகும். நாம் வாங்கும்
பொருட்களின் சுற்றுச்சூழல் தாக்கத்தை கவனத்தில் கொண்டு, சாத்தியமுள்ள
போதெல்லாம் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளைக் கருத வேண்டும்.

ஆற்றலும் நீரும் சேமிப்பது

ஆற்றல் மற்றும் தண்ணீர் சேமிக்கும் பழக்கங்களை மேற்கொள்வது பசுமைமிக்க
எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். பயன்பாட்டில் இல்லாத ஒளியூட்டும் சாதனங்களை
அணைத்துவைப்பது, மழைநீர்சேகரிப்பு நிலைகளை உருவாக்குவது போன்ற எளிய
நடைமுறைகள் வளங்களை பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைப்பதிலும் உதவுகின்றன.

தன்னார்வமாகச் செயல்பட்டு சுற்றுச்சூழல் நடவடிக்கைகளை ஆதரித்தல்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் நேரடியாக பங்கேற்பது பசுமைமிக்க எதிர்காலத்திற்கு நமது பங்களிப்பை அளிக்கும் சிறந்த வழியாகும். சுத்தம் செய்யும் நிகழ்வுகளில் தன்னார்வத் தொண்டு, மரநடுகை செயல்பாடுகளுக்கு ஆதரவு, ஆகியவை, நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை மற்றும் பிறரையும் ஊக்குவிக்கக்கூடியவை.

தங்களை மற்றும் பிறரையும் சுற்றுசூழல் கல்வி மூலம் விழிப்புணர்வுடன் செய்யுங்கள்

சுற்றுச்சூழல் சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த அறிவை பெருக்கிக் கொள்ளுதல், நிலைத்த வாழ்வை ஏற்க முக்கியமாகும். இந்த அறிவை மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம், மேலும் பலரை பசுமைமிக்க வாழ்க்கை முறைக்கு ஊக்குவிக்க முடியும்.

உலக சுற்றுசூழல் தினம் 2025 கருப்பொருள்:

2025 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள் " உலகளாவிய பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் (Ending plastic pollution) " . இது நாம் ஒவ்வொருவரும், தனிநபர்கள், சமூகங்கள், தொழில்கள் மற்றும் அரசாங்கங்கள், பொறுப்பேற்கவும், நமது பழக்கவழக்கங்களை மறுபரிசீலனை செய்யவும், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளைக் குறைக்கவும், வளர்ந்து வரும் இந்த பிளாஸ்டிக் மாசுபாட்டு நெருக்கடிக்கு சிறந்த தீர்வுகளை வலியுறுத்தவும் அழைப்பு விடுக்கிறது.

பிளாஸ்டிக் மாசுபாடு என்றால் என்ன?

பிளாஸ்டிக் மாசுபாடு என்பது நமது சூழலில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடப்பதைக் குறிக்கிறது, இது வனவிலங்குகள், சூழல் தன்மை மற்றும் மனித வாழ்க்கையை எதிர்மறையாக பாதிக்கிறது. ஆழமான பெருங்கடல்கள் முதல் மிக உயர்ந்த மலைகள் வரை, பிளாஸ்டிக் கழிவுகள் இப்போது எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. இது ஆறுகளை அடைக்கிறது, நிலப்பரப்புகளை குப்பைகளாக்குகிறது மற்றும் அதை உணவாக நினைக்கும் விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கிறது. 2025 உலக சுற்றுச்சூழல் தினத்தை நாம் நெருங்கி வரும்போது, ​​இந்த நெருக்கடியின் வேர்களையும், பிளாஸ்டிக் நமது உலகத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் புரிந்துகொள்வது முக்கியம்.

பிளாஸ்டிக் உற்பத்தியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

1900களின் முற்பகுதியில், இலகுரக, நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் மலிவான புரட்சிகரமான பொருளாக பிளாஸ்டிக் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதன் பயன்பாடு வேகமாக விரிவடைந்தது. 1950களில், பிளாஸ்டிக் உற்பத்தி வேகமாகப் பரவி, பேக்கேஜிங், கட்டுமானம், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பலவற்றிற்கான தீர்வுகளை வழங்கியது. இன்று, உலகளாவிய பிளாஸ்டிக் உற்பத்தி ஆண்டுக்கு 400 மில்லியன் டன்களைத் தாண்டியுள்ளது. இதில் பெரும்பகுதி சில நிமிடங்களில் தூக்கி எறியப்படுகிறது , ஆனால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் மக்காமல் இருக்கும் தன்மை கொண்டது இந்த பிளாஸ்டிக் . ஒரு காலத்தில் ஒரு அதிசயப் பொருள் போல் தோன்றிய ஒன்று, இப்போது பூமியின் மிகவும் அழுத்தமான சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்களில் ஒன்றாக மாறியுள்ளது.

பிளாஸ்டிக் வகைகள்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் (Single Use Plastics): இவை பிளாஸ்டிக் பைகள், பேக்கேஜிங் போன்ற ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருட்கள். இவை கடல்களிலும் குப்பைக் கிடங்குகளிலும் காணப்படும் பிளாஸ்டிக் கழிவுகளில் குறிப்பிடத்தக்க பகுதியை உருவாக்குகின்றன.

நுண் பிளாஸ்டிக்குகள் (Micro plastics): 5 மில்லிமீட்டருக்கும் குறைவான அளவுள்ள சிறிய
பிளாஸ்டிக் துகள்கள், நுண் பிளாஸ்டிக்குகள் உடைந்த பெரிய பிளாஸ்டிக்குகளிலிருந்து
வருகின்றன அல்லது அழகுசாதனப் பொருட்கள் போன்ற பொருட்களில் வேண்டுமென்றே
சேர்க்கப்படுகின்றன. அவை வெறும் கண்ணுக்குத் தெரியாது, ஆனால் நீர், மண் மற்றும் காற்றில் கூட உள்ளன.

தொழில்துறை பிளாஸ்டிக்குகள் (Industrial Plastics): இவற்றில் பிளாஸ்டிக் பாட்டில்கள்,
கொள்கலன்கள் மற்றும் தொழில்துறை பொருட்கள் போன்ற பெரிய பொருட்கள் அடங்கும்.
காலப்போக்கில், அவை சிறிய துண்டுகளாக உடைந்து, மாசு பிரச்சனையை மோசமாக்குகின்றன.

பிளாஸ்டிக் மாசுபாட்டின் ஆதாரங்கள்

நுகர்வோர் கழிவுகள்: முறையற்ற முறையில் அப்புறப்படுத்தப்படும் அல்லது மறுசுழற்சி செய்யப்படாத பாட்டில்கள் மற்றும் பைகள் போன்ற பொருட்கள் இயற்கை சூழல்களில் முடிவடைகின்றன.

தொழிற்சாலைக் கழிவுகள்: தொழிற்சாலைகள் பிளாஸ்டிக் துகள்கள், பேக்கேஜிங் மற்றும் கழிவுகளை நீர்வழிகள் மற்றும் மண்ணில் வெளியிடுகின்றன, பெரும்பாலும் இவை சரியான கட்டுப்பாடு இல்லாமல் நிகழ்கின்றன

ஜவுளி மற்றும் ஆடைகள்: பாலியஸ்டர் போன்ற செயற்கை துணிகள் துவைக்கும்போது
மைக்ரோபிளாஸ்டிக்ஸை உதிர்த்து, பின்னர் ஆறுகள் மற்றும் கடல்களில் பாய்கின்றன.

உலக சுற்றுச்சூழல் தினம் பிளாஸ்டிக் மாசுபாடு

பிளாஸ்டிக் மாசுபாடு என்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, அது நம்
அனைவரையும் பாதிக்கும் ஒரு ஆழமான நெருக்கடி. நாம் போற்றும் பெருங்கடல்கள், ஆறுகள் மற்றும் காடுகள் பிளாஸ்டிக் கழிவுகளால் மூச்சுத் திணறுகின்றன . பிளாஸ்டிக் குப்பைகளுக்கு மத்தியில் கடல்வாழ் உயிரினங்கள் உயிர்வாழ போராடுகின்றன, நீர்வழிகள்
அடைக்கப்பட்டுள்ளன, நிலப்பரப்புகள் மறைந்து போகாத, மக்காத குப்பைகளால்
சிதைக்கப்படுகின்றன. ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளை (Single Use Plastics )
நம்பியிருப்பதைக் குறைத்தல் மற்றும் மறுசுழற்சி உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல் ஆகியவை இந்த ஆண்டு கருப்பொருள் உள்ளடக்கம் மற்றும் நோக்கம் ஆகும் .

 பிளாஸ்டிக் மாசுபாட்டிலிருந்து நாம் வாழும் பூமியை பாதுகாப்பது என்பது நமது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது,  வனவிலங்குகளைப் பாதுகாப்பது மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதாகும். விழிப்புணர்வு, செயல் மற்றும் புதுமை மூலம், பிளாஸ்டிக் மாசுபாட்டின் மீதான பயன்பாட்டை , மோகத்தை நாம் மாற்ற முடியும். பிளாஸ்டிக் பயன்பாட்டை திட்டமிட்டு குறைத்தால் ஒழிய நாம் இந்த பூமிப்பந்தை காப்பாற்ற இயலாது .

கட்டுரையாளர் :

க. லெனின்பாரதி

அறிவியல் தொடர்பாளர் , கோயம்புத்தூர்

physicsleninbarathik@gmail.com