சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவா்களுக்கான தேர்வு போட்டிகள் ஏப்ரல் 8ம் தேதி நடைபெறுகிறது.
கல்லூரி மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்கும் வகையில், அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் ஆறு இடங்களில் இயங்கி வரும் இவ்விடுதிகளின் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 21ம் தேதி வெளியிடப்பட்டது.சிறப்பு நிலை விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக ஏப்ரல் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதை தொடர்ந்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை பொியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், எம்ஆர்கே ஹாக்கி அரங்கம், நேரு பார்க் ஆகிய இடங்களில் காலை 7 மணிக்கு நடைபெறும். இந்த தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்மே ஏற்றுக்கொள்ளப்படும். கூடுதல் விவரங்கள் ஆடு கள தகவல் தொடா்பு மையத்தின் 951400777 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். அந்த வகையில் இந்த தேர்வுக்கு 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 17வயது நிரம்பிய கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு, முதுகலை முதலாம் ஆண்டு சேர விரும்பும் மாணவா்கள் விளையாட்டு விடுதிக்காக விண்ணப்பிக்கலாம். அதேபோல், தனி நபர், குழு விளையாட்டு போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள், தமிழக அணியில் தேர்வு செய்யப்பட்டு, தேசிய விளையாட்டு சம்மேளம், இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டவர்கள், பன்னாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் பெற்றவர்கள், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான பதக்கம் வென்றவர்கள் ஆகியோரும் விண்ணப்பிக்கலாம்.