குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் உயிாிழந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் டிவிகே நகரை சேர்ந்த ரமேஷ் மகன் சுஜித்குமார் (11) மற்றும் யுவராஜ் மகன் பிரதோஷ் 11. இருவரும் காமாட்சிபுரம் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று காலை (வியாழன்) பள்ளியில் பிளஸ் 2 தேர்வு நடந்தது. மற்ற வகுப்பு மாணவர்கள் மதியம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால், இரு சிறுவர்களும் காலையில் தங்களது வீட்டில் இருந்துள்ளனர். காலை உணவு சாப்பிட்டு விட்டு, விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, இருவரும் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளனர். மதியம் 1 மணி ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால், பெற்றோர் பல இடங்களில் தேடினர். அப்போது கண்ணம்பாளையம் குளத்தில் சிறுவர்கள் சடலமாக மிதப்பதாக தகவல் வெளியானது. சூலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று சிறுவர்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பினர். சூலூர் போலீசார் இதுதொடர்பாக விசாரிக்கின்றனர்.